“தொம்த தானி தார திரனா... திரனா... திரனன...” சவுக்க காலத்தில் தொடங்கி மத்திமத்தில் ஆடி கடைசியாகத் துரித காலத்தில் மின்னல் வேகத்தில் தாளம் தவறாமல் ஆடி முடித்தாள் மீரா. “பிரமாதம்!” என்று கைதட்டி
“தொம்த தானி தார திரனா... திரனா... திரனன...” சவுக்க காலத்தில் தொடங்கி மத்திமத்தில் ஆடி கடைசியாகத் துரித காலத்தில் மின்னல் வேகத்தில் தாளம் தவறாமல் ஆடி முடித்தாள் மீரா. “பிரமாதம்!” என்று கைதட்டினான் சுந்தரேசன். “இதே ஆட்டம். இங்கொன்றும் அங்கொன்றுமாய் நகைகள். நல்ல இங்கிலீஷ் கலர்களில் ஆடை. போதும், எல்லா வெளிநாட்டுக்காரர்களும் உன் காலடியில் தான் கிடக்கப் போகிறார்கள்” என்று கூறியவாறு ஒரு நீளமான சிகரெட்டைப் பற்ற வைத்தான் அவன். இது ஒன்று அவனிடம் மீராவுக்குப் பிடிக்காது, ஆடும் போது நடராஜப் பெருமானை மனதில் வைத்து, மேடையைக் கோவிலாக உருவகித்து, அவருக்குச் செய்யும் பூஜையே தன் ஆட்டம் என்று எண்ணுவாள் அவள். அங்கே வந்து சுந்தரேசன் சிகரெட்டுப் புகையை ஊதினால் அவளுக்கு வெறுப்பாகிவிடும். இதை அவனிடம் எத்தனையோ தடவை, ஜாடைமாடையாகவும், பிறகு நேரடியாகவும் கூடச் சொல்லிப் பார்த்துவிட்டாள். ஆனால், “இது ஒன்றை விட்டுவிடு கண்ணு. தொண்டையிலும் மூக்கிலும் அந்த நெடி இல்லையென்றால் எனக்கு யோசனையே ஓடுவதில்லை” என்று முடித்து விட்டான் அவன் அதற்குமேல் அதிகமாக அவனிடம் ஏதும் சொல்ல அவளுக்கும் மனம் வரவில்லை. எப்படிச் சொல்வது? ஒருவகையில் அவளது முன்னேற்றத்துக்காக முழுமூச்சுடன் பாடுபடுகிறவன் அவன். அவனது ‘நடராஜ தரிசனம்’ குழுவில் அவளை முக்கிய நாயகியாக்கி சிறப்பு தந்திருக்கிறவன்.அத்தோடு அவளது வாழ்விலும் பங்கேற்கப் போகிறவன். அவனிடம் அவளால் எப்படிக் கடுமையாகப் பேச முடியும்? ஆனால் கடுமையென்ன, வெள்ளமாய்ப் பெருகிய வியர்வையை ஒற்றி எடுத்தபடி பெரிய பெரிய மூச்சுகளை உள் எடுத்து வெளி விட்டுக்கொண்டிருந்த அவளுக்குச் சற்று நேரம் சும்மா கூடப் பேச முடியவில்லை. வேகமாக ஆடியதால் சிவந்திருந்த கன்னங்களையும், வியர்வையால் ஒட்டியிருந்த உடை வெளிப்படுத்திய வடிவான உடல் அமைப்பையும், வேக மூச்சுகளால் அது விம்மித்தணிந்த விதத்தையும் சற்று நேரம் வெறித்த சுந்தரேசன், “இது ஒரு மடத்தனம் இந்த நாட்டில்” என்றான் எரிச்சலோடு. ‘எது?’ என்பது போல அவனை ஏறிட்டாள் மீரா. டஇதுவே மேல்நாடாக இருக்கட்டும்; இப்போது இருவரும் முத்தமிட்டுக் கொண்டு இருப்பார்கள். சேர்ந்தே வாழுவார்கள். இந்தப் பட்டிக்காட்டு பாரத நாட்டில் என்னடா என்றால் ஒழுக்கக்கேடு என்று முத்திரை குத்தி ஒரேயடியாக ஒதுக்கிவிடுவார்கள்” என்றான் வெறுப்புடன் அவன். அவன் சொல்வது புரிந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு பேசாதிருந்தாள் மீரா. அவன் இன்னமும் எரிச்சலுற்று, “சரி, இலைமறைகாய் போல வாழலாம் என்றால் நீ அதற்குமேல் பெரிய பட்டிக்காடு. ஸ்டார் டி.வி. தொடர்களை எல்லாம் பார்த்து என்ன பிரயோசனம்?” என்றான் மேலும். இனி இதே குரலில் அடுக்கத் தொடங்கிவிடுவான். என்னதான் மணக்கப் போகிறவன் என்றாலும் அதற்குமுன் சேர்ந்து வாழ்வது என்றால் அவள் மனம் ஒப்புவதாக இல்லை. அதை வெளிப்படையாகச் சொல்லி இன்னமும் ‘மூடை’க் கெடுக்க வேண்டாம் என்று நினைத்தவளாக, “சிவதாண்டவத்தில் ஒரு சின்ன இடம் சரியாக வரவில்லை. சுந்தரேசன். அதை மட்டும் இன்னொருதரம் பயிற்சி செய்துவிடலாமா? இன்று புரோகிராமில் ஆட வேண்டுமில்லையா?” என்று பேச்சை மாற்றினாள்